புதிய தலைமுறை வார இதழில் 45 வாரங்கள் வெளிவந்த கட்டுரைகளின் நூல் வடிவம் இது. தமிழில் பயணக் கட்டுரை நூல்கள் நிறையவே வந்திருக்கின்றன. ஆனால் பயணங்களை வரலாற்றுக் கோணத்தில் அணுகுகிற நூல்கள் அநேகமாக இல்லை. அந்தக் குறையைப் போக்கும் வித்தியாசமான நூல் இது.
பயணக் கட்டுரை என்பது பெரும்பாலும் ஒரு நாட்டிற்கு அல்லது இடத்திற்குச் சென்று வந்த அனுபவத்தையும், அங்கு கண்டவற்றையும், உண்டவற்றையும் பற்றிப் பேசுகிற சுய அனுபவப் பதிவுகளாக அமைந்திருக்கும்.
ஆனால், இந்த நூல் பயணத்தை வரலாற்றின் வெளிச்சத்தில் அணுகுகிற நூல். நாம் அன்றாடம் உண்ணுகிற உணவு, தினந்தினம் காண்கின்ற விலங்குகள், பறவைகள், தாவரங்கள், வாசித்து மகிழ்கிற இலக்கியம், கேட்டு நெகிழ்கிற இசை, பல பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், ஏன் சில விழுமியங்களேகூடப் பயணங்கள் நம் மீது ஏற்படுத்திய மாற்றங்களின் விளைவாக நேர்ந்தவை. அந்தப் பயணங்கள் நேற்றோ அல்லது நெடுங்காலத்திற்கு முன்போ நிகழ்ந்தவைகளாக இருக்கலாம்.
சுருக்கமாகச் சொல்லப்போனால், அறிவியலுக்கு நிகராக வாழ்வின் மீது தாக்கங்களை ஏற்படுத்தி மாற்றங்களைக் கொண்டு வந்த சிறப்புப் பயணங்களும் உண்டு.
கலை, பண்பாடு, விளையாட்டு, உணவு, விளைபொருட்கள், விலங்கினங்கள், மருத்துவம், தானியங்கள், தாவரங்கள் போன்ற பலவும் பல்வேறு நாடுகளுக்கிடையிலான பயணங்களால் பரிமாறிக்கொள்ளப்பட்டவை எனும் வரலாற்றுத் தகவல்கள் மலைக்கவும், மயக்கவும் வைக்கின்றன.
இப்புத்தகம் முன்வைக்கும் பயணங்களின் பயன்பாடுகளையும், அவற்றின் ருசியையும், பிரம்மாண்டத்தையும், அவசியத்தையும் வாசிக்கிறபோது பயணத்தின் மீதான ஆவலும், பிரியமும் பயணங்கள் மீதான ஒருவகைக் காதலாகக் கைகூடி விடுகிறது. பயணங்கள் ஏற்படுத்திய நன்மைகளைப் பற்றிப் பேசும் இந்த நூல், அதே நேரத்தில் துயரம் நிறைந்த பயணங்களையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை.
பயணம் செல்லாமல் தீவாகத் தேங்கியவர்கள் அடைந்த நாகரிக வீழ்ச்சியையும் இது குறிப்பிடுகிறது. சாகசப் பயணங்கள் பற்றிப் பட்டியலிடும் இது தனி மனிதர்கள் பயணத்தால் பெறுகிற மனரீதியான நன்மைகளையும், உடல்ரீதியான ஆதாயங்களையும் வெளிப்படுத்தி உடனே நம்மைப் பயணம் செய்யத் தூண்டுகிறது. இந்த ஒரு புத்தகத்தைப் படிப்பதன் மூலம் ஒருவர் பல புத்தகங்களைப் படித்த பயனைப் பெற முடியும் என்பது உறுதி.
2012-ஆம் ஆண்டு திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் சிறந்த நூலுக்கான விருதினைப் பெற்றது இந்நூல்.
பதிப்பாளர்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.
41-பி சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை 600098.
தொலைபேசி: 044-26251968/26258410
முதல் பதிப்பு: டிசம்பர் 2010 (புதிய தலைமுறை பதிப்பகம்)
6-ஆவது பதிப்பு: செப்டம்பர் 2015 (புதிய தலைமுறை பதிப்பகம்)
7-ஆவது பதிப்பு: ஜூலை 2018 (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.)
8-ஆவது பதிப்பு: நவம்பர் 2019 (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.)
Copyright ©spylily.amasadoradepan.com.es 2025